Blogger Widgets

தூரத்துத் தெருநாய்கள்!

  இரவிலும் அகோரமாய் ஒலிக்கிறது எங்கோ தூரத்திலிருக்கும் வெறிப்பிடித்த தெருநாய்களின் சப்தம். அந்தச் சப்தம் காதினுள் படும்போதே குலையெல்லாம் நடுங்கும், கைகள் உதறும். சுவற்றோரமாய் ஒண்டிக்கொள்கிறேன் நான்.

  தனக்குப் பசி என்றால் யாரையும் கடிக்கும். தன் குடும்பத்திற்கு பசி என்றால் ஊரையே கொளுத்தும். தன் இச்சைக்குத் தன்னைத்தானே கற்பழித்துக்கொள்ளும். ஊரில் இருந்த எல்லோரையும் கடித்து வெறியேற்றிச் சாகடித்ததோடல்லாமல் அருகில் மிச்சமிருப்போரையும் தேடி அலைகின்றன.

  இந்த நாய்களிடமிருந்து தப்பித்து எப்படியோ ஊர் கடந்து வந்துவிட்டோம். ஆனாலும் இன்னும் என் காதுகளில் அதன் கொக்கரிப்புச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ரத்தம் சொட்டும் அதன் கோரப்பற்களின் வெறித்தனம் இன்னும் என் கண்களைவிட்டு அகலவில்லை.



  ஊர்தாண்டி வந்தாலும் எப்படியேனும் என் கண்களில் தொலைக்காட்சியிலோசெய்தித்தாளிலோ தட்டுப்பட்டுவிடுகின்றன. அந்த கொடூர விகார முகத்தைக் காணவே அருவருப்பாயிருக்கும். ஆனால் எப்போதும் அந்த நாய்களின் பேச்சைக் கேட்க ஆயிரம் கழுதைகளாவது அவைகளைச் சுற்றிக் கூடியிருக்கும். அவைகளின் வாயிலிருந்து ஒழுகும் இறந்துபோனவர்களின் குருதியைச் சுற்றியிருக்கும் கழுதைகள் ஆர்ப்பரித்து மகிழும்.

  எங்களை எப்படியோ அந்த நாய்கள் மோப்பம் பிடித்துவிட்டன போலும். இப்பொழுது வெளியில் அதே ரத்த வாடை, கொக்கரிப்புச் சப்தம். செடிகள் சலசலக்கும் ஓசை.

  கண்கள் இருளுகின்றன, இதயம் உறைந்துபோய் அருகிலுள்ளோர் முகத்தையெல்லாம் பார்க்கிறேன். அவர்கள் பயத்தில் ஏற்கனவே இறந்துவிட்டனர். இருக்கிறார் இல்லையென்ற எல்லாக் கடவுள்களையும் வேண்டிக்கொள்கிறேன், ஏதாவது ஒன்றாவது நம்மைக் காப்பாற்றாதா? என்ற நப்பாசையில்.

  மேலும் சத்தம் அதிகரிக்கிறது. நான் சுவருடன் அட்டையாய் ஒட்டிக்கொள்கிறேன். சுவரின் குளிர்ச்சி உடலில் ஏற நானோ தரையைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தேன். கண்கள் சொருக எதிரில்  தூரத்துத் தெருநாய்கள்!


1 COMMENTS: