அமர்க்களமாய்த்
தேர்,
உள்ளிருந்த
கடவுளுக்கோ
ஆவல்!
வருடத்தில்
ஒருநாள்தானே
ஊரைச் சுற்றி
பார்கிறார்!
அனைவரது
முகத்திலும் மகிழ்ச்சி
தேரை இழுக்கப்
போவதால்!
அனைவரும்
இழுத்தனர்.
நடுவீதியை
அடைந்தது தேர்.
அதற்குப்
பின்தான் குழப்பமே
யார்வீதியில்
முதலில் இழுத்துச் செல்வதென்று!
ஒரு
மேல்சாதிக்கும்,
மற்றுமொரு
மேல்சாதிக்கும்
வாக்குவாதம்.
சூடத்தை ஏந்திய
கைகளில்
அரிவாள்களும், கத்திகளும்
நடுங்கினார்
கடவுள்.
தவறுதலாய்த்
தன்னை
ஒரு சாதியாய்
நினைத்து
மற்ற சாதியினர்
வெட்டிவிடுவார்களோ? என்று.
முடிவாய்க்
கடவுளிடமே
கேட்டனர் மக்கள்,
“யார் வீதியில்
முதலில்
இழுத்துச்செல்வது?”
“மனிதர்கள் இருக்கும் வீதியில்
முதலில்
இழுத்துச்செல்லுங்கள்”
கடவுளின் பதில்.
அனைவருக்கும்
ஒரே குழப்பம்
மனிதர்கள் எந்த
வீதியில்
இருக்கிறார்கள்???
கடவுளின் பதிலால்
நடுத்தெருவில்
அனாதையாய்
தேரும், கடவுளும்!!
Tweet |
0 COMMENTS:
Post a Comment