Blogger Widgets

எழும் மாணவர் சக்தி - மனதைத் திற!

  மாணவர்கள் என்றால் நடிகர்களுக்கு பாலாபிசேகம் செய்வார்கள், பஸ்டே என்ற பெயரில் கலவரம் நடக்கும், பக்கத்துக் கல்லூரியில்போய் கலவரம் செய்வார்கள், எதிர்காலத்தை பற்றிய எந்த தெளிவும் இருக்காது என்று மட்டும் எண்ணிக் கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.

  இந்தித் தடுப்புப் போராட்டம் வெற்றிபெற ஒரே காரணம் மாணவர்கள் மட்டும்தான் என்பதை யாருமே மறுக்க இயலாது. ஆனால் இலங்கை இறுதிப்போரின்போது தொடங்கிய மாணவர் போராட்டம் அப்போதைய அரசால் தடுக்கப்பட்டுவிட்டது. சகோதர்கள் கொத்துக்கொத்தாய்ச் சாகும்போது தாய்த் தமிழ்நாடு வேடிக்கை பார்த்தது என்ற குற்ற உணர்ச்சி பல நாட்களாய் இருந்தது. தமிழ் இளைய சமுதாயம் வெறும் கேளிக்கைகளில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் பல நாட்களாகவே இருந்தது.

  ஆனால் இப்போது மாணவர்கள் தொடர்ச்சியாய் இலங்கைப் பிரச்னைக்கு எதிராக தமிழகம் முழுவதும் கட்சி, இனம், மதம், சாதி சார்பின்றி அனைத்துக் கல்லூரி மாணவர்களும் "மாணவர் சக்தி" என்ற ஒரே ஆயுதத்துடன் போராடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் ரத்தம் தமிழரின் ரத்தம் என ஒவ்வொரு மாணவரும் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

  தலைவனில்லை, கட்சியில்லை ஆனால் லட்சியம் மட்டும் கொண்டு தவறென்றால் ஒன்றாய்க்கூடி அதை எதிர்க்கும் மாணவர்கள் நம் சமுதாயத்தில் இருப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் பெருமை.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களுடன் சிலம்பரசன்.

தொடங்கிய போராட்டம்:

  சென்னை லயோலா கல்லூரில் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை, தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய 8 மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காம் நாளான 11/03/13 அதிகாலை 2 மணிக்கு போலீஸார் கட்டாயமாக அங்கிருந்து அவர்களை வெளியேற்றினர். பின்னர் மாலையில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் தொடங்கிய போராட்டம் தமிழ்நாடு முழுதும் பற்றிக்கொண்டது.


  இன்று போராட்டம் நடத்தாத மாவட்டங்களே இல்லை என்னும் அளவுக்கு சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி ஏன் பண்டிச்சேரியிலும்கூட மாணவர் போராட்டத்தால் அதிர்ந்துவருகிறது.


தற்போது போராட்டத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள்:

சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம், நந்தனம் கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, லயோலா கல்லூரி, கே.ஆர்.எம்.எம் கல்லூரி, கோவை அரசு கலைக்கல்லூரி, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைகல்லூரி, அரியலூர் அரசுக்கல்லூரி, தஞ்சாவூர் அரசுக்கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், திருச்சி தூய வளனார் கல்லூரி, ஈ.வே.ரா கல்லூரி, ஜோசப் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைகழகம், திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி, அம்பை கலைக்கல்லூரி, மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள், காரைக்குடி அழகப்பா கல்லூரி, காரைக்குடி ஆனந்தா கல்லூரி, கும்பகோணம் பூம்புகார் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர், மன்னார்குடி ராஜ கோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பல.

UPDATE: அண்ணா பல்கலைக்கழகமும், எம்.ஐ.டி மாணவர்களும் நாளை முதல் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளனர்.


UPDATE: தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை வரும் ஞாயிறன்று கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்




மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் :

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.




போராட்டக் காட்சிகள்:

  கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் தோழர் ஜகதிஷ் (22 years) கலந்து கொண்டார், அவர் ஒரு மாற்று திறனாளி.
  அவர் எடுத்து வரும் மருத்துவ சிகிச்சைக்காக முன்று வேளையும் உணவு உண்ண வேண்டும் என்றபோதும் இனப்படுகொலை செய்யப்பட்ட தன் தொப்புள் கொடி உறவுக்காக தமிழீழம் வேண்டியும், சர்வதேச விசாரணை நடத்தக்கோரியும் 14/03/13ல் காலை முதல் மாலை 6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது.


  கோவை சட்டக் கல்லுரி மற்றும் அரசு கலைக்கல்லுரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாநிலை அறப்போரை மதிமுக கட்சி அலுவலகத்தில் நடத்தி வருகிறார்கள்.... 



  இவற்றையெல்லாம் பார்த்த பாரதியார் பல்கலைக்கழகம் நிர்வாகம் உடனே பல்கலைக்கழகத்தை காலவரையின்றி மூடினர்.



  திருவண்ணாமலையி்ல் பள்ளிகல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




  பெரியார் மணியம்மை கல்லூரி



  மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காலவரையற்ற உண்ணாவிரதம்.




  ராமேஸ்வரத்தில் 9-ம் வகுப்பு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 


  இதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு வெளியேயும் போராட்டங்களைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ஞாயிற்றுக் கிழமையன்று ஹைதராபாத்தில் நாங்கள் ஒருநாள் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியில் அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்தும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் நடைபெற்றுள்ளது.


நன்றி : Loyolahungerstrike
டிஸ்கி : அரசு அனைத்துக் கல்லூரிகளையும் காலவரையற்று இழுத்து மூடியிருக்கிறது. எல்லாவற்றையும்விட இந்தப் போராட்டம் கடைசிவரை அமைதியாய் நடக்க வேண்டும்.


2 COMMENTS:

  1. போராட்டமாவது, மண்ணாங்கட்டியாவது. எல்லாம் இரண்டொரு நாளில் காலி.

    ReplyDelete
    Replies
    1. வேர்களில் இன்னும் நீர் இருக்கிறது என்பதிலே எமக்குச் சந்தோசம் ஐயா!

      Delete